சேலம், முன்னாள் முதல்வர் கருணாநிதி, 6ம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சேலத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் தலைமை வகித்தார்.கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஈ.வெ.ரா., சிலை பீடத்தில் புறப்பட்ட ஊர்வலம், அரசு மருத்துவமனை வழியே அண்ணா பூங்காவை அடைந்தது. பின் அங்குள்ள கருணாநிதி உருவ சிலைக்கும், படத்துக்கும் அடுத்தடுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சேலம் மேயர் ராமச்சந்திரன், அவைத்தலைவர் சுபாஷ், பொருளாளர் கார்த்திகேயன், மாநகர் செயலர் ரகுபதி, மண்டல தலைவர்கள் உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து முன்னாள் எம்.பி., பார்த்திபன் தலைமையில் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல் தாரமங்கலத்தில், தி.மு.க., நகர செயலர் குணசேகரன் தலைமையில் மேற்கு ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில், கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் தேர் நிலையம் அருகே உள்ள கருணாநிதி வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட அவைத்தலைவர் கந்தசாமி, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.* ஓமலுாரில் கருணாநிதி படத்துக்கு, ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமையில் நிர்வாகிகள், கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மாவட்ட கவுன்சிலர்கள் சண்முகம், அழகிரி, நகர செயலர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர். கருப்பூரில் நகர செயலர் லோகநாதன் தலைமையில் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.