| ADDED : ஜூலை 01, 2024 03:36 AM
கோத்ரா: நீட் இளநிலை தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக, குஜராத்தை சேர்ந்த பள்ளி உரிமையாளரை, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்தாண்டுக்கான தேர்வு மே 5ல் நாடு முழுவதும் உள்ள 4,750 மையங்களில் நடந்தது. 23 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, மத்திய கல்வி அமைச்சகம் இந்த வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைத்தது. இந்நிலையில், குஜராத்தின் ஆமதாபாத், ஆனந்த், கேடா மற்றும் கோத்ரா ஆகிய நான்கு மாவட்டங்களில் நீட் தேர்வு நடந்த மையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதன் முடிவில், கோத்ராவின் பஞ்சமால் மாவட்டத்தில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியின் உரிமையாளர் தீக்சித் படேல் கைது செய்யப்பட்டார். நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுடன் இவர் தொடர்பில் இருந்ததாகவும், தனது ஜெய் ஜலராம் பள்ளியை தேர்வு மையமாக தேர்ந்தெடுக்க மாணவர்களை அவர் வற்புறுத்தியதாகவும், சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.---------