சேலம்: சேலம் குகை பொது நலப்பிரியர் சங்க வளாகத்தில், தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. அதை தொடங்கி வைத்து, மேயர் ராமச்சந்திரன் கூறியதாவது: மாநகராட்சி பகுதிகளில், 80,000 தெரு நாய்கள் உள்ளன. தினமும், 800 நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுவரை, 12,669 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள அனைத்து நாய்களுக்கும் ரேபீஸ் தடுப்பூசி செலுத்த, புதன்தோறும் மண்டல அலுவலகம், வார்டு பகுதியில், இந்த முகாம் நடத்தப்பட உள்ளது.அதன்படி ஜூலை, 3ல் ரெட்டிப்பட்டி துாய்மை ஆய்வாளர் அலுவலகம், சூரமங்கலம் மண்டல அலுவலகம், 10ல் அழகாபுரம் திரவுபதி அம்மன் கோவில் மைதானம், அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம்; 17ல் வாய்க்கால்பட்டறை, அம்மாபேட்டை மண்டல அலுவலகம்; 24ல் குகை மாரியம்மன் கோவில் மைதானம், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம், ஜூலை, 31ல் ஜீவா நகர், சூரமங்கலம் மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடக்க உள்ளது. மக்கள், வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த முகாமில், 162 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.மாநகர நல அலுவலர் மோகன், உதவி கமிஷனர் வேடியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.