சேலம்: சேலம் லோக்சபா தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 14,519 பேர், மாற்றுத்திறனாளிகள், 26,937 பேர் உள்ளனர். இவர்கள் வீட்டில் இருந்தபடி ஓட்டுப்போட வசதியாக, '12டி' விருப்ப விண்ணப்பம், கடந்த மார்ச், 20ல் தொடங்கி, 24 வரை நேரடியாக வீடு தேடி சென்று வழங்கி, பூர்த்தி செய்து பெறப்பட்டது.அதன்படி, 85 வயதை கடந்த, 3,262 பேர், மாற்றுத்திறனாளிகள், 1,918 பேர் என, 5,180 பேர் மட்டும் வீட்டில் இருந்தபடி தபால் ஓட்டுப்போட ஆர்வம் காட்டினர். அவர்களிடம் தபால் ஓட்டு பெற, நேற்று ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் குழுவினர் சென்றனர்.அவர்களிடம் தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்தவர், அடையாள ஆவணங்களை காட்டி தபால் ஓட்டு பெற்று, அதில் அவரவர் ஓட்டை பதிவு செய்து அதற்குரிய உறையில் போட்டு ஒட்டி, அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு, 'சீல்' வைத்து ஓட்டுப்பெட்டியில் செலுத்தினர். அதேபோல் தபால் ஓட்டுகளை வீடு தேடி சென்று பெற, இன்று, நாளை மறுநாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி, சேலம் சின்ன திருப்பதி கலைவாணி நகரில், 85 வயதுடைய முதியோர் வீட்டில் இருந்தபடி ஓட்டுப்போடுவதை பார்வையிட்டார்.