உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோடை மழையால் விற்பனை சரிவு முலாம்பழம் அழுகி குப்பையில் வீச்சு

கோடை மழையால் விற்பனை சரிவு முலாம்பழம் அழுகி குப்பையில் வீச்சு

சேலம் : கோடை மழையால் விற்பனை சரிந்து, முலாம்பழங்கள் அழுகியதால் குப்பையில் வீசப்பட்டன.சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் தர்பூசணி, நுங்கு, முலாம்பழம் உள்ளிட்ட பழங்களை ஏராளமானோர் வாங்கினர். தற்போது மழையால் வெயில் தாக்கம் குறைந்துள்ளது. சீதோஷ்ண நிலையிலும் மாற்றம் ஏற்பட, முலாம்பழம் விற்பனை போதிய அளவில் இல்லை. இதனால் அந்த பழங்கள் அழுகி விற்க முடியாததால், சேலம், சின்னக்கடை வீதி பழ மார்க்கெட் பின்புறம், குப்பையில் வீசப்பட்டன.இதுகுறித்து சத்திரம் பழ மண்டி வியாபாரி பழனிசாமி கூறியதாவது: திண்டிவனம், மலையனுார், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முலாம்பழங்களை வாங்கினோம். கடந்த மாதம் வெயில் தாக்கத்தால் ஒரு கிலோ பழத்தை, விவசாயிகளிடம், 27 ரூபாய்க்கு கொள்முதல் செய்தோம். மொத்த விற்பனைக்கு, 32 ரூபாய், சில்லரை விற்பனையில், 40 ரூபாய்க்கு விற்றோம். தற்போது கோடை மழையால் அதன் விற்பனை போதிய அளவில் இல்லை. இதனால் மொத்த விற்பனையில் கிலோ, 16 ரூபாய், சில்லரை விற்பனையில், 25 ரூபாய்க்கு விற்கிறோம்.மழையால் விளைச்சல் அதிகரித்தது. ஆனால் பழம் வாங்கி விற்கும்போது, 2 அல்லது 3 நாட்களுக்குள் விற்க வேண்டும். இல்லையெனில் பழத்தில் தண்ணீர் விட்டு அழுகிய நிலைக்கு சென்றுவிடுகிறது. அந்த பழங்களை குப்பையில் வீசுகிறோம். இதற்கு விளைச்சல் அதிகரித்து விலை சரிந்ததோடு, போதிய விற்பனை இல்லாததே காரணம். இதனால் விவசாயிகள், வியாபாரிகளுக்கு நஷ்டமே.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை