உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூதாட்டியை கொன்று பணம் திருடிய ஆசிரியர் ஓராண்டுக்கு பின் கைது

மூதாட்டியை கொன்று பணம் திருடிய ஆசிரியர் ஓராண்டுக்கு பின் கைது

மேட்டூர் : சேலம் மாவட்டம், கொளத்துார் அடுத்த கூல்கரடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி, 76. மனைவி அத்தாயம்மாள், 68. இந்த தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர்.அருகிலுள்ள சவேரியார் பாளையத்தை சேர்ந்தவர் மரியலுாயிஸ், 39, இவரது மனைவி ஜூலி மைலா உத்தர்யம். இவர்களுக்கும் மகன், மகள் உள்ளனர். எம்.ஏ., - பி.எட்., முடித்துள்ள மரியலுாயிஸ், பெருந்துறையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால், வேலையில் இருந்து நின்று விட்டார்.அவரது மனைவி, இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கர்நாடகா மாநிலம், மாட்டெல்லியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின், மரியலுாயிஸ் சவேரியார் பாளையத்தில் கட்டட வேலைக்கு சென்று வந்தார்.ராமசாமி, அத்தாயம்மாள் தம்பதி வீடு கட்டும் பணியை துவங்கினர். அங்கு வேலைக்கு சென்ற மரியலுாயிஸ், ராமசாமியிடம், 10,000 ரூபாய் கடன் கேட்டார். ராமசாமி கொடுக்க மறுத்தார்.கடந்த ஆண்டு செப்., 8 இரவு, 11:00 மணிக்கு ராமசாமி வீட்டுக்கு சென்ற மரியலுாயிஸ், திண்ணையில் தனியாக படுத்திருந்த அத்தாயம்மாள் தலையில் பெரிய கல்லை துாக்கி போட்டார். இதில், தலை நசுங்கி அத்தாயம்மாள் இறந்தார். பின், கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொன்றார். பின், வீட்டுக்குள் சென்று, பீரோவில் இருந்த, 1.10 லட்சம் ரூபாயை எடுத்து, ஒன்றும் தெரியாதபடி வீட்டுக்கு சென்றார்.இதற்கிடையே, மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த நபரை, கொளத்துார் போலீசார் ஓராண்டாக தேடி வந்தனர்.நேற்று முன்தினம் இரவில், சவேரியார்பாளையத்தில் பணியில் இருந்த போலீசார், சந்தேகத்துக்கு இடமான நிலையில் சுற்றிய மரியலுாயிசை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.அங்கு அவரது கைரேகையும், கொலை நடந்த இடத்தில் ஏற்கனவே தடய அறிவியல் பிரிவு போலீசார் பதிவு செய்த கைரேகையும் ஒன்றாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மேட்டூர் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் தேவராஜ், எஸ்.ஐ., மணிமாறன் உள்ளிட்ட போலீசார், ஆசிரியர் மரியலுாயிசை கைது செய்து, அவரிடம் இருந்த கம்மல், 50,000 ரூபாய், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி