சேலம் : போடிநாயக்கன்பட்டி ஏரியில் உள்ள ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை அழிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.சேலம், சூரமங்கலத்தில், போடிநாயக்கன்பட்டி ஏரி, 20 ஏக்கரில் உள்ளது. அவற்றை, 19 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது.இதற்கு தண்ணீரை வெளியேற்றியதோடு, கோடை வெயிலால் ஏரியில் தேங்கும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள், துாண்டில் வைத்து மீன் பிடிக்கும்போது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட, ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள் சிக்குவதால் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஏரியில் உள்ள தண்ணீர் முழுதையும் வெளியேற்றி, ஆப்ரிக்க கெளுத்தி வகை மீன்களை அழிக்க, மக்கள் சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சேலத்தாம்பட்டி ஊராட்சி முன்னாள் கவுன்சிலர் வீரக்குமார் கூறுகையில், ''இந்த மீன்கள் உள்ள நீர்நிலைகளில், ஜிலேபி, விரால், குறவை போன்ற நாட்டு மீன்கள் உயிர் வாழ முடியாது. தற்போது ஏரி புனரமைக்கப்படும் நிலையில் குறைந்த தண்ணீரே உள்ளதால், அவற்றில் உள்ள ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை முழுதும் அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.மீன்களால் பாதிப்பு என்ன?'கிளாரிஸ் கைரபைனஸ்' எனும் விலங்கியல் பெயர் கொண்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள், 2013 முதல், இந்தியாவில் தடை செய்யப்பட்டவை. இந்த வகை மீன்கள், பிற மீன்களை கொன்று திண்ணும். மீன்கள் கிடைக்காவிட்டால் பாசி போன்ற நீர்நிலைகளில் உள்ள தாவரங்களை உண்டு பிழைக்கும். ஒரு சீசனுக்கு, 4 லட்சம் முட்டைகள் போடும். குறைந்த ஆழத்தில் சேற்றிலும், சாக்கடையிலும் கூட வளரும். ஆக்சிஜன் குறைவாக கிடைக்கும் நீரில் கூட பல நாட்கள் உயிர் வாழும். வறண்ட நிலத்தில் கூட காற்றை குடித்து உயிர் வாழும்.இயற்கையாகவே பிற வகை மீன்களை கொன்றொழித்து, இவை மட்டும் அதிகம் வளர்ந்து, நம் நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும். இந்த மீன்களின் உடலில் உலோகத்தன்மை அதிகம் உள்ளதால், இவற்றை சாப்பிடுவோருக்கு புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது.