உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கால்நடை கிளை நிலையத்தில் காத்திருக்கும் அவலம்; தரம் உயர்த்த மாநகர் விவசாயிகள் வலியுறுத்தல்

கால்நடை கிளை நிலையத்தில் காத்திருக்கும் அவலம்; தரம் உயர்த்த மாநகர் விவசாயிகள் வலியுறுத்தல்

சேலம்: சேலம், அம்மாபேட்டை அடுத்த தாதம்பட்டி, செல்வ நகரில் கால்நடை கிளை நிலையம் உள்ளது. அதை சார்ந்த வள்ளுவர் காலனி, அல்லிக்குட்டை, கெங்காபுதுார், மன்னார்பாளையம் பிரிவு சாலை, சொட்டையன் கவுண்டன் தெரு, முத்துகவுண்டன் தெரு, வால்காடு, ராமமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.செல்வ நகரில் இருப்பது கால்நடை கிளை நிலையம் என்பதால் அங்கு உதவியாளர் மூலம் முதலுதவி மட்டும் அளிக்கப்படுகிறது. விவசாயிகள், அவசரகால சிகிச்சைக்கு கால்நடைகளை அழைத்து வந்ததும், 16 கி.மீ.,ல் உள்ள நரசோதிப்பட்டி கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்து அவர் புறப்பட்டு செல்வ நகர் வந்தபின்தான், கால்நடைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதுவரை விவசாயிகள், அங்கேயே காத்து கிடக்க வேண்டிய அவலம் தொடர்கிறது.பல நேரங்களில் நரசோதிப்பட்டியில் வேலைப்பளுவால் செல்வ நகர் வருவதை, கால்நடை மருத்துவர் தவிர்த்து விடுகிறார். அதேநேரம் நரசோதிப்பட்டிக்கு கால்நடைகளை அழைத்துச்சென்று சிகிச்சை பெறுவதும், விவசாயிகளுக்கு சிரமமாக உள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். மேலும் தனியார் கால்நடை மருந்தகத்தை நாடினால், ஒவ்வொரு முறை ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலை நேரிடுவதாக தெரிவிக்கின்றனர். அதனால் கால்நடை கிளை நிலையத்தை தரம் உயர்த்த, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர்.இதுகுறித்து சேலம் மாவட்ட விவசாயிகள் சங்க துணைத்தலைவர் செந்தில்குமார் கூறுகையில், ''கால்நடை கிளை நிலையத்தை, கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்த, முதல்வர் தனி பிரிவுக்கு மனு அளித்துள்ளோம். விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தி உள்ளோம். சமீபத்தில் நடந்த ஜமாபந்தியிலும், விவசாயிகள் சார்பில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அதனால் மாநகர் எல்லையில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ