சேலம்: அடகு வைத்த, 10 கிலோ தங்க நகையை விற்று மோசடி செய்த, மேலாளரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோவை, சிங்காநல்லுார் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் பெருமாள், 68. இவர், சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, நகை அடகு கடை வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், பொன் அமராவதி, ஆலவாயில் பகுதியை சேர்ந்த சேட்டு மகன் நந்தகோபால், 30.பெருமாளின் உறவினரான இவர். அடகு கடையில் மேலாளராக வேலை செய்து வந்தார். கடந்த, 1ல், பெருமாள் அடகு கடையில் தணிக்கை செய்துள்ளார். அப்போது வாடிக்கையாளர்கள், 415 பேர் அடகு வைத்த நகைகளை காணவில்லை. அத்துடன், வங்கியில் நகைகளை அடகு வைத்திருப்பதற்கான ரசீதுகள் சிக்கியது. சில நகைகளை விற்று மோசடி செய்திருப்பது தெரிந்தது. இதுபற்றி, அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.அதன்பின், மாநகர் மத்திய குற்றப்பிரிவுக்கு புகார் மாற்றப்பட்டு, இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் விசாரணை நடத்தினார். இதில், அடகு நகைகளை, வங்கியில் குறைந்த வட்டிக்கு அடகு வைத்து, தன் வாடிக்கையாளர்களிடம், அதிக வட்டி வசூலித்தும், சில நகைகளை விற்பனை செய்தும் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. மேலும் வாடிக்கையாளர்கள் பலர், தங்களின் நகைகளை மீட்டு சென்றது போல, போலியான ஆவணங்களை தயாரித்து, உரிமையாளர் பெருமாளை நம்ப வைத்துள்ளார்.அதன் மூலம் மொத்தமாக, 10.775 கிலோ தங்கநகை மோசடி செய்திருப்பது அம்பலமானது. அதன் மதிப்பு, 4 கோடியே, 17 லட்சத்து, 27 ஆயிரத்து, 800 ரூபாய். இது தொடர்பாக ஏமாற்றுதல், மோசடி ஆவணங்கள் தயாரித்தல், நம்பிக்கை மோசடி ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ், நந்தகோபால் மீது வழக்குபதிந்து, அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவரது வாக்குமூலத்தின்படி, முதல்கட்டமாக, 1.25 கிலோ தங்கநகையை போலீசார் மீட்டுள்ளனர். நகைகளை அடகு வைத்த வங்கிகள் விபரம், யார், யாருக்கு நகைகளை விற்பனை செய்துள்ளார். அடகு வைத்த வாடிக்கையாளர் விபரம், இதற்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகள் யார் என்பன போன்ற பல்வேறு கோணங்களில், போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.