வீரபாண்டி: சேலம், மணியனுாரை சேர்ந்தவர் ஷாஜகான், 22. 'பேஷன் டெக்னாலஜி' முடித்துவிட்டு திருப்பூரில் பணிபுரிந்தார். 6 மாதங்களாக, அங்கிருந்து சேலம் வந்து சாயப்பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். உடன் வேலை பார்ப்பவர், சேலம், அன்னதானப்பட்டியை சேர்ந்த கதிரேசன், 19. சேலம், வீரபாண்டி காலனியை சேர்ந்த, 'ஆக்டிங்' டிரைவர் சிவா, 22. இவரும், ஷாஜகானும் கல்லுாரியில் ஒன்றாக படித்தவர்கள்.நேற்று முன்தினம் இரவு மது அருந்த, ஷாஜகான், கதிரேசன் ஆகியோர், சிவாவை தேடி வீரபாண்டி காலனிக்கு வந்தனர். அங்கு சிவாவின் தாயான, பூ வியாபாரி சசிகலா, 42, மட்டும் இருந்தார். அவரிடம் நள்ளிரவு, 1:00 மணிக்கு கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் கழுத்து, தோள், கைகளில் கத்தியால் தாக்கினர். அவர் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்தனர். உடனே சசிகலா அணிந்திருந்த சங்கிலியை பறித்துக்கொண்டு இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சசிகலா புகார்படி ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்தனர். இருவரும் சங்கிலியை அடகு வைக்க முயன்றபோது, 'கவரிங்' என தெரிந்தது. பின், 'பல்சர்' பைக்கில் அரியானுார் வந்தபோது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் இருவரும் சிக்கினர். விசாரணையில் சசிகலாவை கத்தியால் தாக்கியதை ஒப்புக்கொண்டனர். இதனால் ஆட்டையாம்பட்டி போலீசார், இருவரையும் கைது செய்தனர்.