ரூ.14 லட்சம் மோசடி 2 பேர் கைது
ஓமலுாரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 61. இவர், சேலம் எஸ்.பி.,யிடம் சமீபத்தில் புகார் அளித்தார். அதில், 'மகன் அருண்குமாருக்கு அரசு துறையில் இளநிலை உதவியாளர் வேலை வாங்கி தருவதாக, சேலம், சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன், அஸ்தம்பட்டியை சேர்ந்த தங்கையாராஜீ ஆகியோர் தெரிவித்தனர். அதை நம்பி, 2021ல் அடுத்தடுத்து, 14.36 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால் வேலை வாங்கி தராததோடு, பணமும் தராமல் ஏமாற்றி வருகின்றனர்' என கூறியிருந்தார்.இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்ததில், இருவரும் பணம் பெற்று வேலை வாங்கி தராமல் மோசடி செய்தது தெரிந்தது. இதனால் வழக்குப்பதிந்த போலீசார், சந்திரசேகரன், 48, தங்கையாராஜீ, 49, ஆகியோரை நேற்று கைது செய்தனர். -- நமது நிருபர் -