| ADDED : பிப் 24, 2024 03:38 AM
சேலம்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2ம் நாளாக நேற்று பணியை புறக்கணித்து போராட்டம் தமிழகம் முழுதும் நடந்தது. சேலத்தில் வருவாய்த்துறையினர் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு பணியை புறக்கணித்து, கலெக்டர் அலுவலக பின்புறமுள்ள சங்க அலுவலகம் முன், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி கூறுகையில், ''பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல் உள்ளிட்ட, 10 கோரிக்கைகளும், கடந்த மே மாதம் நடந்த பேச்சில் ஏற்கப்பட்ட நிலையில், 9 மாதங்களாகியும் அரசாணை வெளியிடப்படவில்லை. அதை நிறைவேற்றாவிட்டால் வரும், 27ல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்,''என்றார்.மாவட்டத்தில், 14 தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடந்தது. இதில், 4 ஆர்.டி.ஒ., அலுவலகம், சிறப்பு நில எடுப்பு, 5 அலுவலகத்தை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். அதனால் வருவாய்த்துறை பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.