உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2ம் நாளும் பஸ் ஸ்டிரைக் பிசுபிசுப்பு

2ம் நாளும் பஸ் ஸ்டிரைக் பிசுபிசுப்பு

சேலம்: அரசு போக்குவரத்து கழகத்தின் அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று, 2ம் நாளாக நீடித்தது. எனினும் சேலம் கோட்டத்தில் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டதால் எந்த பாதிப்பும் இல்லை. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காலை, 9:00 மணி நிலவரப்படி இயக்கப்பட்ட, 1,250 அரசு பஸ்களின் எண்ணிக்கை, மதியம், 2:00 மணிக்கு, 1,545 ஆக அதிகரித்து, பயணியரின் வருகையும் கணிசமாக இருந்ததால் பஸ் போக்குவரத்தில் இயல்பு நிலை காணப்பட்டது.சேலத்தில், புது, பழைய பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து அனைத்து தடங்களிலும் பஸ்கள் இயக்கப்பட்டன. வெளி மாவட்ட பஸ்களும் சேலத்துக்கு வழக்கம்போல் வந்து சென்றதால், பஸ் ஸ்டிரைக் பிசுபிசுத்துப்போனது. முன்னதாக காலை, 5:00 மணிக்கு சேலம் காந்தி சிலை முன், அ.தொ.பே., மண்டல தலைவர் நல்லப்பன் தலைமையிலானோர், 'கண்டக்டர்களிடம் பணியில் ஈடுபடாதீர், நியாய போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள்' என பிரசாரம் செய்தனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து ஆட்கொல்லி பாலத்தில் ஆதரவு கேட்டும் எடுபடாமல் போனதால் கலைந்து சென்றனர்.காலை, 11:45 மணிக்கு, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் செம்பன் தலைமையில், 200க்கும் மேற்பட்டோர், புது பஸ் ஸ்டாண்ட் அருகே திரண்டனர். பின் மெய்யனுார் பணிமனை முன், ஊர்வலமாக புறப்பட்டு பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் வெளி வரும் பகுதியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களில், 120 பேரை போலீசார் கைது செய்தனர்.சி.ஐ.டி.யு., சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் தியாகராஜன் கூறியதாவது:தற்போதைய பணியாளர்களுக்கு குறைந்தபட்சம், 4 மாத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். மீதி, 18 மாத அகவிலைப்படியை, பொங்கலுக்கு பின் பேச்சு நடத்தி தர வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்கள், 96,000 பேருக்கு, 8 ஆண்டாக அகவிலைப்படி இல்லை. அதில், 6,000 பேர் இறந்துவிட்டனர். ஒட்டுமொத்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்துள்ள, 14,000 கோடி ரூபாயில் இருந்து தான் எங்களுக்கு பணப்பலன்களை கேட்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை