தலைவாசல்:முயல் வேட்டையின் போது வனத்துறையினரை தாக்கிய விவகாரத்தில், 3 தனிப்படை அமைக்கப்பட்டு, 30 பேரை தேடி வருகின்றனர்.பெரம்பலுார்
மாவட்டம் வெண்பாவூரில் உள்ள கோவில் திருவிழாவையொட்டி, கடந்த,
12ல், முயல் வேட்டை திருவிழா நடந்தது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த,
30க்கும் மேற்பட்டோர், சேலம் மாவட்ட எல்லையான தலைவாசல் அருகே
கிழக்குராஜாபாளையம், ராஜகோபாலபுரத்தில் முகாமிட்டனர்.கெங்கவல்லி
வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனக்காப்பாளர்கள், முயல்
வேட்டையில் ஈடுபட்ட குணசேகரன், மணிகண்டனை பிடித்து ஜீப்பில்
ஏற்றினர்.வெண்பாவூர் ஊராட்சி துணைத்தலைவர் பொன்னர் தலைமையில்
பலர், வனத்துறையினரை தள்ளிவிட்டு அந்த இருவர், இரு முயல்கள்,
குத்துக்கோலை மீட்டுச்சென்றனர்.இதுகுறித்து வனச்சரகர்
புகார்படி, வீரகனுார் போலீசார், பொன்னர் உள்பட, 30 பேர் மீது, 5
பிரிவுகளில் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்தனர். அதேபோல் ஆத்துார்
இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வனத்துறை புகார்படி,
வனத்துறையினரை தாக்கியதில் அடையாளம் காணப்பட்ட, 8 பேர் மீது
வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதுதொடர்பாக, வனத்துறை,
போலீசார் தரப்பில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தலைமறைவான, 30
பேரையும் தேடி வருகின்றனர். மேலும் வீடியோவில் பதிவானவர்களை,
அடையாளம் காணும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.