கரூர், கரூர் அருகே, பள்ளி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட பெயின்டர் உள்பட, ஆறு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், காளியப்ப கவுண்டன்புதுார் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் தாமரைக்கண்ணன், 23, பெயின்டர். இவர் கடந்தாண்டு ஜூலை, 16ல், அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படித்து வந்த, 14 வயது சிறுமியை கடத்தி சென்று, சோமூர் பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, சிறுமி நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, தகவல் அறிந்த தான்தோன்றிமலை மகளிர் ஊர்நல அலுவலர் துளசிமணி, 56, கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதையடுத்து, சிறுமியை திருமணம் செய்த தாமரைக்கண்ணன், உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை கோவிந்தசாமி, 53, தாய் செல்வி, 50, முருகாயி, 50, ஆனந்தகுமார், 39, அவரது மனைவி சுகுணா, 34, ஆகிய ஆறு பேரை, கரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.பிறகு, கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி தங்கவேல் முன், ஆறு பேரும் ஆஜர்படுத்தப்பட்டு வரும், 28 வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், சிறுமி திருமண வழக்கில் தலைமறைவாக உள்ள, ஆனந்த குமாரின் தம்பி குமார், 35, என்பவரை கரூர் மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.