சேலம் : சேலம், ஈரோடு, கரூர் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும், 7 ரயில்கள், சேலம், நாமக்கல், கரூர் வழித்தடத்தில் மாற்றி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம்-கரூர் அகல ரயில்பாதை திட்டம் முடித்து, 2013 ல் பயன்பாட்டுக்கு வந்தது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்களையும், திண்டுக்கல், மதுரை, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களையும் இணைக்கும் வகையில், இந்த வழித்தடம் உருவாக்கப்பட்டது.பயன்பாட்டுக்கு வந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதில் ஒரு சில ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. சேலம், ஈரோடு, கரூர் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களை, சேலம், நாமக்கல், கரூர் வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வந்தது. தற்போது ஏழு ரயில்களை இரு மார்க்கத்திலும், சேலம், நாமக்கல், கரூர் வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதன்படி, சேலம், ஈரோடு, கரூர் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும், திருநெல்வேலி-ஸ்ரீமாதா வைஷ்ணதேவி காட்ரா ரயில், வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா ரயில், மதுரை-கச்சேகுடா ரயில், துாத்துக்குடி-ஒகே ரயில், மதுரை-சண்டிகர் ரயில், மயிலாடுதுறை-மைசூர் ரயில், துாத்துக்குடி-மைரூரு ரயில் ஆகியவற்றை இரு மார்க்கத்திலும், சேலம், நாமக்கல், கரூர் வழித்தடத்தில் இயக்க, ரயில்வே வாரியத்துக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளன.சேலத்திலிருந்து ஈரோடு, கரூர் வழித்தடத்தில் இயக்கும் போது, 126 கிலோ மீட்டர் தொலைவும், நாமக்கல் வழித்தடத்தில் இயக்கும் போது, 85 கிலோ மீட்டர் தொலைவும் வழித்தடம் அமைந்துள்ளது.இதன் மூலம், நாமக்கல் வழியே, தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.