| ADDED : ஜூலை 09, 2024 06:20 AM
ஓமலுார் : 'வட்ட' எழுத்தில் 1,330 திருக்குறள் எழுதி, அதன் மூலம் திருவள்ளுவர் ஓவியம் வரைந்த அரசு பள்ளி மாணவிக்கு ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் 'சாதனை' சான்றிதழ் வழங்கப்பட்டது.சேலம் மாவட்டம், ஓமலுார் சிந்தாமணியூரை சேர்ந்த நெசவு தொழிலாளி நாகராஜ். இவரது மனைவி உமா. இவர்களது மகள் கீர்த்திமாலினி, 16, சேலம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார். விடுமுறை நாட்களில், கி,பி.,3ம் நுாற்றாண்டில் பயன்பாட்டில் இருந்த பழமையான 'வட்ட' எழுத்துக்களை எழுத பழகியுள்ளார்.இதன் மூலம் கடந்த ஜூன், 20ல், பள்ளியில் தொடர்ந்து 15 மணி நேரம், வட்ட எழுத்துக்களில், 1,330 குறள்களை எழுதி அதன் மூலம் திருவள்ளுவரை ஓவியமாக வரைந்து சாதனை முயற்சி மேற்கொண்டார். தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமையில், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடுவர் பாரதிராஜா முன்னிலையில் நடந்தது. வட்ட எழுத்துக்கள் முறையாக எழுதப்பட்டுள்ளதா என, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.நேற்று இதை அங்கீகரித்து, சாதனைக்கான சான்றிதழை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் வெங்கடாசலபதி, பள்ளி மாணவிக்கு வழங்கினார். மேலும் தலைமை ஆசிரியர் பாலமுருகனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழாசிரியை மைதிலி, ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சேலம் பிரதிநிதி பாரதிராஜ், மாணவியின் பெற்றோர் பங்கேற்றனர்.