| ADDED : பிப் 16, 2024 09:51 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே கொண்டையம்பள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் உள்ளது. அதன் முன் பள்ளம் இருந்ததால் மண் கொட்டி சமன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன், 'மூலப்புதுார் இலுப்படி மாரியம்மன் கோவில் அருகே உள்ள குட்டையில், கிராவல் மண் கொண்டு வந்து சமன் செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும். இரவில் மண் அள்ளக்கூடாது' என உத்தரவிட்டார்.ஆனால் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு அந்த குட்டையில், பொக்லைன், இரு டிராக்டர் எடுத்து வந்து சிலர் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி மக்கள், வாகனங்களை பிடித்து வாக்குவாதம் செய்தனர். அப்போது விவசாயி ரவிச்சந்திரன், 58, டிராக்டர் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். டிராக்டர் டிரைவர் அறிவழகன் நிறுத்தாமல் ஓட்டிச்செல்ல முயன்றதால், டிராக்டரில் ஏற முயன்ற ரவிச்சந்திரன் தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை, மக்கள் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து ரவிச்சந்திரன் புகார்படி தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.தாசில்தார் வெங்கடேசன் கூறுகையில், ''ரவிச்சந்திரன், அறிவழகன் இடையே மண் அள்ளுவது தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் சிலர் மண் அள்ளியபோது மக்களுடன் ரவிச்சந்திரன் தடுத்துள்ளார். கனிமவள திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.