நிலக்கடலையில் அதிக மகசூல் பெற அறிவுரை
பனமரத்துப்பட்டி, நிலக்கடலையில் அதிக மகசூல் பெறுவதற்கான வழிகாட்டுதல் குறித்து, வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் அறிக்கை:நிலக்கடலை எண்ணெய் உற்பத்திக்கு மட்டுமின்றி, தரம் வாய்ந்த புரதச்சத்து நிறைந்த உணவுப்பொருளாகவும் பயன்படுகிறது. சேலம் மாவட்டத்தில் நிலக்கடலை அதிகம் பயிரிடப்படுகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப, அதன் மகசூலை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதுஅதற்கு தரமான உயர் ரக விதைகள், சிறந்த வேளாண் தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து அதிக மகசூல், கூடுதல் லாபம் பெறலாம்.உயர் விளைச்சல் ரகங்களான கதிரி, தரணி, வி.ஆர்.ஐ., ஆகியவற்றை விதைத்து உற்பத்தி செய்யலாம். குறைந்த வயதுடைய பூச்சி நோய் எதிர்ப்பு திறன் நிறைந்த ரகங்களை பயிர் செய்து அதிக மகசூல், லாபம் பெறலாம்.சிறு பருப்பு விதைகள் ஒரு ஏக்கருக்கு, 50 - 55 கிலோ, பெரிய பருப்பு விதைகள், 55 - 60 கிலோ பயன்படுத்த வேண்டும். இதன் மூலம், 15 சதவீதம் அதிக மகசூல் கிடைக்கும்.ஒரு கிலோ விதைக்கு, 4 கிராம் உயிரியல் கட்டுப்பாடு காரணிகளான டிரைக்கேடெர்மா டிரிடி மற்றும் சூடோமோனஸ் புளுரசன்ஸ், உயிர் உரங்களான டிரசோபியம் பாஸ்போர்ட் பாக்டீரியா மற்றும் பொட்டாஸ் பாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்து, நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். போராக்ஸ் மற்றும் நுண்ணுாட்ட கலவை விதைப்பு முடிந்த பின், நிலத்தின் மேல் இடவேண்டும். விதைத்த, 45 நாட்களுக்கு பின், களை கட்டுப்படுத்தி ஜிப்சம் இட்டு செடிகளுக்கு மண் அணைத்தால், காய்கள் அதிக எடை மற்றும் திரட்சியாகவும் உற்பத்தியாகும். பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில், வி.ஆர்.ஐ., - 10 நிலக்கடலை விதை வழங்கப்படுகிறது. விவசாயிகள் கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்து பயனடையலாம்.