சேலம் மாவட்டம் ஆத்துார் நகராட்சிக்கு சொந்தமான பொது கிணறு, 27வது வார்டு, ராஜாஜி காலனியில் உள்ளது. அதன் தெற்கு சுவரையொட்டி, 2010ல் அங்கன்வாடி கட்டப்பட்டது. அங்கு, 15 குழந்தைகள் உள்ளனர். தவிர கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகின்றன. சில நாட்களாக, கிணற்றின் தெற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்ததோடு கொஞ்சம், கொஞ்சமாக சரிந்து வருகிறது. இதனால் அச்சுவர் மீதுள்ள அங்கன்வாடி, தற்போது ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது.இதுகுறித்து ராஜாஜி காலனி பி.புஷ்பா, 42, கூறுகையில், ''அங்கன்வாடி அருகே கிணற்றின் சுவர் இடிந்துள்ளதால் தினமும் அச்சத்துடன் குழந்தைகளை அனுப்ப வேண்டியுள்ளது,'' என்றார்.ராஜாஜி காலனியை சேர்ந்த வி.சுதாகர், 33, கூறுகையில், ''கிணற்றின் சுவர் சரிந்து வருவதால், அசம்பாவிதம் ஏற்படும் முன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.தி.மு.க.,வை சேர்ந்த, 27வது வார்டு கவுன்சிலர் ஆர்.பிரபு, 35, கூறுகையில், ''நகராட்சி தலைவர், கமிஷனரிடம் தகவல் தெரிவித்துள்ளேன். இவற்றை சரிசெய்வதாக உறுதி அளித்துள்ளனர்,'' என்றார்.நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபா கமால் கூறுகையில், ''கிணற்றின் சுற்றுச்சுவர் குறித்து ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.