உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆத்துார் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து; மாணவ, மாணவியர் உள்பட 18 பேர் காயம்

ஆத்துார் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து; மாணவ, மாணவியர் உள்பட 18 பேர் காயம்

ஆத்துார் : ஆத்துார் அருகே, தனியார் பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாணவ, மாணவியர், ஆசிரியைகள் உள்பட 18 பேர் காயமடைந்தனர்.சேலம் மாவட்டம், ஆத்துார், புதுப்பேட்டை பகுதியில், தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சேர்ந்த வேனில், நேற்று காலை, 8:30 மணியளவில், வளையமாதேவி, ஒதியத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 45 மாணவ, மாணவியர், சில ஆசிரியைகளை ஏற்றி வந்தனர்.வேனை, டிரைவர் உதயகுமார், 57, ஓட்டி வந்தார். காலை, 9:30 மணியளவில், வளையமாதேவி கிராமத்தில் இருந்து, பள்ளிக்கு சென்ற வேன், வளையமாதேவி பிரிவு சாலை பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், வளையமாதேவி ரசிகா, 16, திவ்யதர்ஷினி, 16, ஹரிகிருஷ்ணன், 14, லலித்குமார், 13, ஒதியத்துார், விக்னேஷ்வரி, 16, நடுவலுார் கவிபிரசாத், 12; ஆசிரியைகள் சுமதி, 36, இளவரசி, 30, கார்த்திகா, 29, உள்பட மொத்தம். 18 பேர் காயமடைந்தனர்.இவர்களை, அப்பகுதி மக்கள் மீட்டு, ஆம்புலன்சில் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்த நிலையில், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, டி.எஸ்.பி., சதீஷ்குமார், விபத்து குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் ஒன்றிய குழு தலைவர் பத்மினிபிரியதர்ஷினி ஆகியோர் நேரில் சென்று, மாணவ, மாணவியருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி கூறுகையில், ''ஆத்துாரில் விபத்துக்குள்ளான தனியார் பள்ளி வேன், ஆய்வுக்கு கொண்டு வந்தபோது, இந்த வாகனத்துக்கு ஆவணங்கள் உள்பட அனைத்தும் சரியான முறையில் தான் இருந்தது. சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தினமும் வாகனங்களை முழுமையாக பரிசோதனை செய்த பின், பள்ளி மாணவ, மாணவியரை அழைத்து வரவேண்டும் என, பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ