ஏரி மண் ஏற்றும் டிராக்டர்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அருகே சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு விவசாயத்துக்கு மண் எடுக்க, ஏராளமான டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. மண் பாரம் ஏற்றிய டிராக்டர்கள் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. பல டிராக்டர் ட்ரெய்லரில் நம்பர் பிளேட் இல்லை. இதனால் விபத்து ஏற்பட்டால் வழக்குப்பதிவு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். தவிர மண்ணை தார்ப்பாய் போட்டு மூடி எடுத்து செல்வதில்லை. காற்றில் பறக்கும் மண், டிராக்டர் பின்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கண், முகத்தில் படுகின்றன. அப்போது அவர்கள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.