சேலத்தில் மின் இணைப்புக்கு லஞ்சம்; வணிக ஆய்வாளர், போர்மேன் கைது
சேலம்: சேலத்தில் மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் மற்றும் போர்மேனை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.சேலம், காமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணிவண்ணன், 40; லேத் பட்டறை வைத்துள்ளார். சொந்த வீட்டின் மேல் தளத்தில் வீடு கட்டி வருகிறார். இதற்கு மின் இணைப்பு மற்றும் மீட்டர் மாற்றி தரக்கோரி, மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். தாமதமானதால் மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலகம் சென்று விபரம் கேட்டுள்ளார்.அப்போது வணிக ஆய்வாளர் மணி, 46, 'தனக்கு, 3,000 ரூபாயும், போர்மேனுக்கு, 1,000 ரூபாயும் தர வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். லஞ்சம் தர விரும்பாத மணிவண்ணன், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகாரளித்தார். அவர்கள் திட்டப்படி, மின்வாரிய அலுவலகத்துக்கு நேற்று காலை, ௧௦:௦௦ மணிக்கு சென்றார். வணிக ஆய்வாளரிடம், 3,000, போர்மேன் ராதாகிருஷ்ணனிடம், 1,000 ரூபாயை கொடுத்தார். இருவரும் பணத்தை பெற்றபோது, அலுவலக வளாகத்தில் மறைந்திருந்த, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார், கைது செய்தனர்.