உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பொக்லைனுடன் மண்ணில் புதைந்து டிரைவர் பலி :போலீஸுக்கு தெரியாமல் உடல் எரிப்பு

பொக்லைனுடன் மண்ணில் புதைந்து டிரைவர் பலி :போலீஸுக்கு தெரியாமல் உடல் எரிப்பு

சேலம்: சேலம் அருகே, கல்குவாரி மண்ணில் பொக்லைன் வாகனத்துடன் புதைந்து பலியான டிரைவரின் உடல், போலீஸுக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது. இது தொடர்பாக, வி.ஏ.ஓ., புகார் கொடுத்ததையடுத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம், ஏற்காடு மலையடிவாரத்தில், செட்டிச்சாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதிகளில் ஆங்காங்கே உள்ள வெள்ளை கற்களை வெட்டி எடுக்க, கனிமவளத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை. எனினும், கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் வெள்ளைக்கற்கள் தொடர்ந்து வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி, ஜீவாநகரை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் பரசுராமன் (37). அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கடந்த ஆறு ஆண்டாக வெள்ளைக்கற்களை வெட்டி, கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவில், வெடி வைத்து தகர்த்த பாறைகள் பொக்லைன் உதவியுடன் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. செட்டிசாவடியை சேர்ந்த டிரைவர் விஜயகுமார் (21) பொக்லைனை இயக்கி, பாறைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பகுதியில், ஏற்கனவே பாறைகள் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களில் ராட்சத பள்ளங்கள் காணப்படுகின்றன. இரவு 11.30 மணியளவில் தகர்த்த பாறைகளை அப்புறப்படுத்தி கொண்டிருந்த பொக்லைன் இயந்திரம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, 40 அடி ஆழ பள்ளத்தில் சரிந்து விழுந்தது. அதன் மீது, அங்குள்ள மண் குவியல்கள் மொத்தமாக சரிந்து, மூடிக்கொண்டன. பொக்லைன் இயந்திரத்துடன், டிரைவர் விஜயகுமார் மண்ணில் புதையுண்டு பலியானார். இதை, நேரில் பார்த்த சக தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். விஜயகுமாரை மீட்க பலமணி நேரம் போராடியும் பலனில்லை. தகவல் அறிந்து, தி.மு.க., பிரமுகர் பரசுராமன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். விஜயகுமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களை நேரில் அழைத்து, அவர்களுடன் கட்ட பஞ்சாயத்து பேசி, விஜயகுமார் பலியான சம்பவம் வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டது. மண்ணில் புதையுண்ட விஜயகுமாரின் உடலை, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வெளியே எடுத்தனர். பின்னர், போலீஸுக்கு தெரியாமல், காலை 8 மணியளவில் விஜயகுமாரின் உடல் தீவைத்து எரிக்கப்பட்டது. இது குறித்து, ஊர்மக்கள், கன்னங்குறிச்சி போலீஸார் மற்றும் சேலம் தாசில்தார் குமரேசன். கனிமவள தனித்தாசில்தார் ராஜன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றபோது, விஜயகுமாரின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், போலீஸாருக்கு தெரியாமல், பொக்லைன் டிரைவர் விஜயகுமார் உடல் எரிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, செட்டிச்சாவடி வி.ஏ.ஓ., பழனிசாமி கன்னங்குறிச்சி போலீஸில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் கண்ணன் கூறுகையில், ''இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் விபத்து, போலீஸுக்கு தெரியாமல் உடல் எரித்தது ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம். விசாரணைக்கு பின், குற்றவாளியை முடிவு செய்து, வழக்குப்பதிவு செய்வோம்,'' என்றார். கனிமவள தாசில்தார் ராஜன் கூறுகையில், ''கொண்டப்பநாயக்கன்பட்டியில் வெள்ளைக்கற்களை வெட்டி எடுக்க அனுமதி தரப்படவில்லை. எனவே, கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட இடத்தை அளந்து, அதற்கான அபராதம் விதிக்கப்படும்,'' என்றார். இச்சம்பவம் தொடர்பாக, ஆர்.டி.ஓ., பிரசன்ன ராமசாமியும் விசாரணை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி