உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு இல்லை :ஆசிரியர் சங்கம் விரக்தி

தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு இல்லை :ஆசிரியர் சங்கம் விரக்தி

மேட்டூர்: தமிழகத்தில், 100 உயர்நிலைபள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தபட உள்ள நிலையில், அதில், தொழில்கல்வி பாடபிரிவையும் துவங்குவது தொடர்பான அறிவிப்பு இல்லாதது தொழிற்கல்வி பொறியியல் ஆசிரியர் சங்கத்தினரை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தபடுவதாகவும், அப்பள்ளிகளில் கணிதம், அறிவியல், கலைபிரிவு என நான்கு பாடபிரிவுகளுக்கு ஒன்பது முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ஒதுக்கப்படும், என சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தபடும் நிலையில், அப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடம் பிரிவு துவங்குவது, அதற்கென ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லாததால், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி பொறியியல் ஆசிரியர் சங்கத்தினரை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. சங்க மாநில பொது செயலாளர் இதய செல்வன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைபள்ளிகளில் ஆரம்பத்தில், 53 தொழிற்கல்வி பாடபிரிவு இருந்தது. இதில், படிப்பை முடித்த மாணவர்கள் பெரும்பாலோர் சுயமாக தொழில் துவங்கி முன்னேறினர். சமீபத்தில் தொழில்கல்வி பாடபிரிவுகளை அரசு, 12 ஆக குறைத்து விட்டது. தற்போது, தமிழகத்தில், 1,000 மேல்நிலைபள்ளிகளில் தொழில்கல்வி பாடப்பிரிவு உள்ளது. கடந்த ஐந்தாண்டுக்கும் மேலாக தமிழகத்தில் தரம் உயர்த்தப்படும் மேல்நிலைபள்ளிகளில் தொழில்கல்வி பாடபிரிவுகள் துவங்கப்படவில்லை. தரம் உயர்த்தப்படும் மேல்நிலைபள்ளிகளில் பொறியியல் தொழிற்கல்வி பாடபிரிவு துவங்க வேண்டும் என, கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இன்னும் பாடபிரிவுகள் துவங்கப்படவில்லை. நடப்பாண்டில், 100 பள்ளிகளை தரம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அதில், தொழில்கல்வி பாடபிரிவு தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இல்லை. எனவே, தமிழக முதல்வர் தொழில்கல்வி பாடத்தின் முக்கியத்துவம் உணர்ந்து தரம் உயர்த்தப்படும் மேல்நிலைபள்ளிகளில், தலா இரு தொழில்கல்வி பாடபிரிவு துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ