UPDATED : ஆக 15, 2011 02:32 AM | ADDED : ஆக 15, 2011 02:26 AM
மேட்டூர்: பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது என, வங்கிகள் கைவிரிக்கும் நிலையில், புரோக்கர்கள் 15 சதவீத கமிஷன் அடிப்படையில் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு, புதிய நோட்டுகள் தருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழிந்த, அழுக்கான, பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்தால், அதற்கு மாற்றாக புதிய நோட்டுகள் வழங்க வேண்டும் என, இந்திய ரிஸர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடைமுறையில், பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் அவ்வளவு எளிதாக மாற்றி தருவதில்லை. பெரும்பாலான வங்கிகளில் பழைய, அழுக்கான ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக பொதுமக்கள் கொண்டு சென்றால், இப்போது மாற்றிதர முடியாது. சில நாட்கள் கழித்து வாருங்கள். உங்களுக்கு வங்கியில் கணக்கு இருந்தால்தான் மாற்றி தருவோம். கூட்டம் இல்லாத நேரத்தில் வந்து மாற்றி கொள்ளுங்கள். மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் பழைய நோட்டுகளை வாங்குவோம். அப்போது வந்து பழைய நோட்டுகளை மாற்றுங்கள் என வித, விதமான காரணங்களை கூறி பழைய நோட்டுகளை வாங்க மறுத்து ஊழியர்கள் தட்டி கழிக்கின்றனர். வங்கிகளில் இந்த நடவடிக்கையால் சமீபகாலமாக பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றும் புரோக்கர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேட்டூர் பகுதியில் சமீபகாலமாக களம் இறங்கியுள்ள புரோக்கர்கள் கடை, கடையாக ஏறி பழைய, கிழிந்த, அழுக்கான ரூபாய் நோட்டு இருந்தால் கொடுங்கள், அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டு தருகிறோம் என கூறுகின்றனர். ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள கிழிந்த ரூபாய் நோட்டுகள் கொடுத்தால்,150 ரூபாய் கமிஷனாக எடுத்து கொண்டு மீதம் 850 ரூபாய்க்கு புதிய ரூபாய் நோட்டுகள் தருகின்றனர். வங்கிகளில் கிழிந்த நோட்டுகளை மாற்ற முடியாத வியாபாரிகள் பலர் வேறு வழியின்றி புரோக்கர்களிடம் கமிஷன் கொடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்கின்றனர். பழைய நோட்டுகளை வாங்கி செல்லும் புரோக்கர்களுக்கு குறிப்பிட்ட சில வங்கிகளின் ஊழியர்கள் அறிமுகமானவர்களாக உள்ளனர். புரோக்கர்கள் அவர்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மொத்தமாக கொடுத்து முழு தொகையையும் பெற்று கொள்கின்றனர். வங்கிகளின் செயல்பாடுகளில் மக்களுக்கு உள்ள அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக்கி கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக புரோக்கர்கள் கூட்டம் களம் இறங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.