சேலம்: சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில் ஆடிப் பண்டிகையையொட்டி நேற்று நடந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை, ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில் ஆடிப் பண்டிகை, கடந்த ஜூலை 26ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கி நடந்து வருகிறது. இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வான வண்டிவேடிக்கை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட வண்டிகளில், புராதன நிகழ்வுகள், இறை வழிபாடு, தெய்வ உருவங்கள் வேடமிட்ட பக்தர்கள், அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில், செவ்வாய்ப்பேட்டையின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். இந்த வண்டிவேடிக்கை நிகழ்ச்சியை, ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இதில், ராமாயண, மகாபாரத இதிகாச நிகழ்வுகளை நினைவுப் படுத்தும் வண்டி, மகாபாரத போர் காட்சிகள், மகிஷாசுரமர்த்தினி வதம், மார்க்கண்டேய எமதர்ம வதம், பாண்டியன் சபையில் கண்ணகி சாபம், தன்வந்திரி பகவான் அமிர்தகலசத்துடன் காட்சி அளித்த வண்டிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.சேலம் செவ்வாய்பேட்டை தேர் முட்டியில் துவங்கிய வண்டி ஊர்வலம், பஜார் தெரு, கடை வீதி, பால்மார்க்கெட், பெரிய எழுத்துக்கார தெரு, தொல்காப்பியர் தெரு போன்ற முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது. வண்டி வேடிக்கையை முன்னிட்டு, செவ்வாய்ப்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வண்டி வேடிக்கையில் கலந்து கொண்ட வண்டிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை காணவந்த பக்தர்கள், அம்மனை வழிபட்டுச் சென்றனர்.இதற்கான ஏற்பாடுகளை, சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில் வண்டிவேடிக்கை கமிட்டியினர் செய்திருந்தனர்.