இடைப்பாடி: பூலாம்பட்டி அருகே வீடு புகுந்து திருட முயன்ற முகமூடி கொள்ளையர்களை, பூலாம்பட்டி போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, கொள்ளையடிக்கப்பட்ட ஏராளமான பொருட்களை, போலீஸார் பறிமுதல் செய்தனர். பூலாம்பட்டி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி, கள்ளுக்கடை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர், தன் குடும்பத்துடன் தனது தோட்டத்தில் குடியிருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கந்தசாமி வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தபோது, இரவு 11 மணியளவில், வீட்டில் இருந்த நாய்கள் குறைத்துள்ளது. திடுக்கிட்டு எழுந்த கந்தசாமி, தன் வீட்டுக்குள் கொள்ளையர்கள் இருப்பதை கண்டு சத்தம் போட்டுள்ளார். இதனால், அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்துள்ளனர். பொதுமக்கள் வருவதை பார்த்த கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர். ஆளுக்கு ஒரு திசையாக ஓடிய கொள்ளையர்களில், விஜயகுமார் என்பவரை பொதுமக்கள் பிடித்து, போலீஸிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட கொள்ளையன், வெள்ளரிவெள்ளி அருகே உள்ள காவேரி மகன் விஜயகுமார்(27) என்பது தெரியவந்தது. பிடிபட்ட கொள்ளையனை 'முறையாக' விசாரித்ததில், உடன் வந்த மற்ற மூன்று கொள்ளையரையும், போலீஸிடம் காட்டிக் கொடுத்தான். அதன்பேரில், கல்லபாளையம் பகுதியை சேர்ந்த ராஜாகவுண்டன் மகன் சுரேஷ்(25), இடைப்பாடி கோணப்பைப்பு பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மகன் பாலசுப்பரமணி(33), தாவாந்தெரு பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் ராஜ்குமார்(24) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். கொள்ளையர்களிடமிருந்து, இரண்டு மோட்டார் பைக், வீச்சு அரிவாள், மிளகாய் பொடி, கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு, இரண்டு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஓய்வுபெற்ற ஆசிரியர் கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில், நான்கு நபர்களையும் இடைப்பாடி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பூலாம்பட்டி எஸ்.ஐ., வளர்மதி உள்ளிட்ட போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.