சேலம்: சேலத்தில், ஆன்மிகப் பேரவையின் சார்பில், 22ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன பேரணி, வரும் 3ம் தேதி நடக்கிறது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய பிரமுகர்கள், 1,008 கோடி ராமநாம விஜயம் தலைவர் குணசேகரன், நியூ ஸ்டார் பேக்ஸ் ஜான்பீட்டர், சேலம் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி நாசர்கான் ஆகியோர் பேரணியில் பங்கேற்கின்றனர். செப்டம்பர் 3ம் தேதி மாலை 4.30 மணிக்கு, குகை மாரியம்மன் கோவில் பூமிதி திடலில் இருந்து மும்மதத்தினரும் ஒருசேர, காவி கொடியசைத்து பேரணியை துவக்கி வைக்கின்றனர். செட்டிச்சாவடி மாரியம்மன் கோவில் நற்பணி மன்றத்தினர் வழங்கும் கும்மிபாட்டு மற்றும் கோலாட்டம், காயத்ரி தெய்வீகப் பேரவையின் பக்தி பஜன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன், விசர்ஜனப் பேரணியானது, குகை மாரியம்மன் கோவில் தெரு, மூங்கப்பாடி தெரு, திருச்சி மெயின்ரோடு, ஓரியண்டல் சக்தி தியேட்டர், அருணாச்சல ஆசாரி தெரு, கன்னிகாபரமேஸ்வரி கோவில், சின்னக்கடைவீதி, பட்டக்கோவில், அம்மாபேட்டை மெயின்ரோடு, புகையிலைமண்டி ஆர்ச் வழியாக குமரகிரி ஏரியை சென்றடையும். அங்கு விநாயகர் சிலைகள் அனைத்தும் விசர்ஜனம் செய்யப்படும். பேரணியில், சித்தர் சுப்ரமணிய ஸ்வாமிகள், நரசுஸ் காஃபி கம்பெனி நிர்வாக மேலாளர் சிவானந்தம், பொன்னுசாமி மைன்ஸ் லிமிடெட் கவுரிசங்கர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.