உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., ஆட்சியை ஆன்மிகத்துக்கு எதிரான ஆட்சியாக சித்தரிக்க பா.ஜ., முயற்சி: சேகர்பாபு

தி.மு.க., ஆட்சியை ஆன்மிகத்துக்கு எதிரான ஆட்சியாக சித்தரிக்க பா.ஜ., முயற்சி: சேகர்பாபு

ஆத்துார்: ''தி.மு.க., ஆட்சியை ஆன்மிகத்துக்கு எதிரான ஆட்சியாக சித்தரிக்க பா.ஜ., முயற்சி செய்து வருகிறது,'' என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், தி.மு.க., இளைஞர் அணி மாநில மாநாட்டில் பங்கேற்ற, தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அமைச்சராக இருப்பவர் முழுமையாக ஆய்வு செய்யாமல், எடுத்தேன், கவிழ்த்தேன் என பேசுவது சரியானது இல்லை. தினமும் நடக்கும் பூஜைகள், வேதங்களும் கோவில்களில் தடையின்றி நடந்து வருகிறது. தி.மு.க., ஆட்சி, ஆன்மீக ரீதியாக இருப்பவர்களுக்கு அரணாக உள்ளது. தமிழகத்தில், இன்று (நேற்று) மட்டும் 40 கோவில்களில் கும்பாபிேஷகம் நடந்துள்ளது. நாளை (இன்று), 20 கோவில்களில் கும்பாபிேஷகம் நடக்கிறது. இதுவரை, தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 1,270 கோவில்களில் கும்பாபிேஷகம் நடந்துள்ளது. 8,416 கோவில்களுக்கு மாநில அளவில் ஆயுள் குழு அனுமதியளித்துள்ளது.தி.மு.க., இளைஞர் அணி மாநாட்டை திசை திருப்பும் வகையில், தி.மு.க., ஆட்சியை ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி என்று சித்தரிக்க பொய் பிரச்சாரம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு, எத்தனை பொய் பிரசாரம் செய்தாலும், மாநில உரிமை மீட்பு மாநாடு, இந்திய அளவில் பேசும் மாநாடாக மாறும். மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன் சொல்வது எல்லாம் உண்மையில்லை; அவர் என்ன கடவுளா? மத்திய அமைச்சர், கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி மறுப்பதாக, ஆதாரம் இல்லாமல் பதிவிட்டுள்ளார். நாளை (இன்று), அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிேஷகம் நடைபெறவுள்ள நிலையில், ஆன்மிகத்துக்கு எதிரான ஆட்சியை தி.மு.க., நடத்துவதாக கூற இப்படி பொய்யான தகவல் கூறி வருகின்றனர். உணவு வழங்க எங்கும் மறுக்கவே இல்லை. அனைத்து கோவில்களிலும் நாளை (இன்று) வழிபாடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, ''உங்களுக்கு வேண்டிய தகவல்கள் கிடைத்துவிட்டதா?'' என், கூறிவிட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ