| ADDED : பிப் 13, 2024 12:22 PM
சேலம்: சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி ஊராட்சியின், தி.மு.க., கவுன்சிலர்கள் வளர்மதி, கவிதா, அனுசுயா, தியாகராஜன் ஆகியோர் நேற்று சேலம் கலெக்டர் பிருந்தாதேவியிடம் மனு அளித்தனர்.அதன் பின் அவர்கள் கூறியதாவது: ஊராட்சியில், அ.தி.மு.க.,வை சேர்ந்த சந்திரா, தலைவராக உள்ளார். எங்கள் பகுதிகளில் குடிநீர், சாலை வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து தலைவரிடம் தெரிவித்தும், எந்த வசதியும் செய்து தரவில்லை. தி.மு.க., கவுன்சிலர்களாக இருப்பதால், பணிகளை செய்யாமல் பாரபட்சமாக நடந்து கொள்கிறார். பஞ்சாயத்து தலைவரின் கணவர் தலையீடும் அதிகமாக உள்ளது.அரசு பணிகள் தொடங்குவது குறித்து, எங்களுக்கு தகவல் தருவதில்லை. ஆனால் அவர்களுடைய உறவினர்கள், அ.தி.மு.க., பிரமுகர்களை வைத்து பணிகளை தொடங்குகிறார். இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர், ஏற்கனவே இருந்த கலெக்டரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மீண்டும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். இதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வரும், 19ம் தேதி அனைவரும் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வோம்.இவ்வாறு கூறினர்.