உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வறட்சியிலும் மா உற்பத்தியில் அசத்திய விவசாயி: 5 ஏக்கரில் 40 டன் மகசூல்

வறட்சியிலும் மா உற்பத்தியில் அசத்திய விவசாயி: 5 ஏக்கரில் 40 டன் மகசூல்

பனமரத்துப்பட்டி : தோட்டக்கலையின் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வறட்சியிலும், 'மா' உற்பத்தியில் அசத்திய விவசாயிக்கு, 5 ஏக்கரில், 40 டன் மகசூல் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 500 ஏக்கரில், 'மா' சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் வறட்சியால் தண்ணீர் பற்றாக்குறை, பருவநிலை மாற்றத்தால், 'மா' உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்குள்ள காளியாகோவில்புதுார் விவசாயி கணேசமூர்த்தி, தோட்டக்கலைத்துறையின் நவீன தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து, 'மா' உற்பத்தியில் சாதித்துள்ளார்.இதுகுறித்து கணேசமூர்த்தி கூறுகையில், ''வழக்கமாக ஏக்கருக்கு, 5 டன் மகசூல் கிடைக்கும். தோட்டக்கலையின் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதால் ஏக்கருக்கு, 8 டன் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக, தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரவேல் தெரிவித்த தொழில்நுட்பத்தை கடைப்பிடித்ததால், பிஞ்சு உதிர்வு தடுக்கப்பட்டது. மா மரங்கள் கவாத்து செய்யப்பட்டதால் மகசூல் அதிகரித்தது. சொட்டு நீர் பாசனம் வழியே உரங்கள் கொடுத்தேன். அறுவடை செய்து பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு விற்பனைக்கு அனுப்பப்படும். 5 ஏக்கரில், 40 டன் மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.இதுகுறித்து பனமரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரவேல் கூறியதாவது:விவசாயி கணேசமூர்த்தி, 5 ஏக்கரில் பெங்களுரா ரக மா நடவு செய்துள்ளார். வறட்சியான சூழலில் தோட்டக்கலையின் புது தொழில்நுட்பங்களை ஆண்டு முழுதும் கடைப்பிடித்ததால், நல்ல மகசூல் கிடைத்துள்ளது.ஜூன் - ஆகஸ்டில் மா மரங்களில் நுனி கிளைகள் கவாத்து மற்றும் அடி கிளைகள் கவாத்து தொழில்நுட்பங்களை கடைப்பிடித்தார். ஆகஸ்டில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்த, வேம்பு எண்ணெய், காப்பர் ஆக்ஸி குளோரைடு கலந்து தெளித்தார். செப்டம்பர் - அக்டோபரில், ஒரு மரத்துக்கு மட்கிய தொழு உரம் தலா, 50 கிலோ வீதம் கொடுத்தார். அதனுடன் யுரியா, கலப்பு உரம், பொட்டாஷ், நுண்ணுாட்ட சத்து கலந்து கொடுக்கப்பட்டது. டிசம்பரில் ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி இமிடாகுளோப்ரிட், நனையும் கந்தகம், 2 கிராம், போரான், 2 கிராம் கலந்து பூக்கள் வெளிவரும் தருணத்தில் தெளிக்கப்பட்டது. பிப்ரவரி - மார்ச்சில், மா பிஞ்சு உதிர்வை தடுக்க, ஒரு லிட்டர் நீருக்கு, என்.ஏ.ஏ., 0.40 மில்லி(வளர்ச்சி ஊக்கி) கலந்து தெளிக்கப்பட்டது. பூச்சி நோய்களை கட்டுப்படுத்த, தயோமீத்தாக்சோம் அரை கிராம், டைபென்கோனசோல் அரை மில்லி கலந்து தெளித்தார். இதனால் வறட்சி காலத்திலும், தோட்டக்கலையின் தொழில்நுட்பங்களை முறையாக கடைப்பிடிக்க, அமோக விளைச்சல் கிடைத்துள்ளது. ஏக்கருக்கு, 6 முதல், 8 டன் மகசூல் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை