உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மருமகள், பேரனை சுட்ட மாமனார் 2 மாதத்திற்கு பின் சுற்றிவளைப்பு

மருமகள், பேரனை சுட்ட மாமனார் 2 மாதத்திற்கு பின் சுற்றிவளைப்பு

வாழப்பாடி:சேலம் மாவட்டம் வாழப்பாடி, தேக்கல்பட்டி அருகே பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி, 55. இவரது மனைவி லட்சுமி, 45. இவர்களது மகன் சுரேஷ், 28, மருமகள் அனிதா, 23. பேரன்கள் ஸ்ரீகமலேஷ், 6, சர்வமித்ரன், 2, பேத்தி ஸ்ரீஹர்சிகா, 4. இவர்கள் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர். கடந்த ஜூன், 1 நள்ளிரவு, அனிதா, சர்வமித்ரன் ஆகியோரை, நாட்டுத் துப்பாக்கியால் குப்புசாமி சுட்டார். இருவரும் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கியால் தலையில் தாக்கியதில், லட்சுமியும் படுகாயமடைந்தார். உறவினர்கள் மீட்டு, வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சர்வமித்ரன், மேல் சிகிச்சைக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாழப்பாடி போலீசார் குப்புசாமியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று, குப்புசாமி அவரது வீட்டுக்கு பின்புறம் இருந்த நிலையில், போலீசார் கைது செய்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். போலீசார் கூறியதாவது: மது அருந்திய நிலையில் குப்புசாமி, லட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது அனிதா, மாமனாரிடம் வாக்குவாதம் செய்தார். அனிதாவை, குப்புசாமி தாக்கினார். பதிலுக்கு அவரும் தாக்க, ஆத்திரமடைந்த குப்புசாமி, தோட்டத்தில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து அனிதாவை சுட்டார். அப்போது, அவரது மடியில் அமர்ந்திருந்த குழந்தை சர்வமித்ரனும் காயம் அடைந்தார். தடுக்க முயன்ற லட்சுமி தலையில், துப்பாக்கியால் தாக்கினார். பின், உறவினர்கள் தாக்கி விடுவர் என்ற அச்சத்தில், துப்பாக்கியுடன் அப்பகுதியில் உள்ள கோதமலைப்பகுதியில், 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுஉள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை