உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காதல் திருமணம் செய்த மகளை வழிமறித்து மீட்டு சென்ற தந்தை

காதல் திருமணம் செய்த மகளை வழிமறித்து மீட்டு சென்ற தந்தை

ஓமலுார்; சேலம் அருகே மகளின் காதல் திருமணத்தை ஏற்காத தந்தை, அவரது காதலனை தாக்கி, தன் மகளை அழைத்துச் சென்றார். தர்மபுரி மாவட்டம், தொப்பூரைச் சேர்ந்தவர் கலைச்செல்வன், 31; பி.காம்., பட்டதாரியான இவர், கார் ஓட்டுநராக உள்ளார். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, சின்னவடகம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகள் ப்ரியா ராகினி, 23; எம்.பி.ஏ., படித்துள்ளார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் ஐந்தாண்டுகளாக காதலித்தனர். செப்., 4ல் வீட்டை விட்டு வெளியேறி, கிருஷ்ணகிரியில் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பெண் வீட்டார், ப்ரியா ராகினியை தேடினர். இந்நிலையில், காதல் ஜோடி சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சமடைய காரில் நேற்று வந்தனர். இந்த தகவலறிந்த பெண் வீட்டார், ஓமலுார் டோல்கேட் அருகே வந்தபோது, முருகன் உட்பட சிலர் காதல் ஜோடி வந்த காரை நிறுத்தினர். காரில் இருந்த கலைச்செல்வனை சரமாரியாக தாக்கி விட்டு, காரை அடித்து நொறுக்கினர். பின், ப்ரியா ராகினியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். காயமடைந்த கலைச்செல்வன், ஓமலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவரது புகாரின்படி, ஓமலுார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ப்ரியா ராகினியின் தாய் வசந்தி, சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை