கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பூ வியாபாரிகள்
சேலம், சேலம் வ.உ.சி., மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட பூ வியாபாரிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இது குறித்து வியாபாரிகள் நல சங்க தலைவர் வெங்கடேசன் கூறியதாவது: சேலம் சின்னக்கடை வீதி வ.உ.சி., நாளங்காடி, 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் வ.உ.சி., பூ மார்க்கெட் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வியாபாரிகளின் பயன்பாட்டிற்கு கடந்தாண்டு வந்தது. அப்போது பூ வியாபாரிகள் தொழில் நடத்த, ஒரு கடைக்கு ரூ.100 முதல் 200 வரை வசூலிக்கப்பட்டது.இந்நிலையில், இந்தாண்டு மாநகராட்சி சார்பில் புதியதாக டெண்டர் விடப்பட்டது. அதில் சிறிய கடை முதல் பெரிய கடை வரை மாத வாடகை, 15 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை தர வேண்டும் என்றும், மேலும் கடைக்கு முன் பணமாக, 8 லட்சம் முதல், 15 லட்சம் ரூபாய் வரை கட்டவேண்டும் அப்போதுதான் கடை கிடைக்கும் என அதிரடியாக உத்தரவு போட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ளோம். தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவிலேயே வருமானம் பெறும் நாங்கள், மாநகராட்சியின் புதிய உத்தரவால் இடிந்து போய் உள்ளோம்.இது குறித்து மாநகராட்சியிடம் கேட்டதற்கு, ஒப்பந்தத்தை மாற்ற முடியாது என நிராகரித்து விட்டனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய விசாரணை நடத்தி, பழைய முறைபடியே நாள் அடிப்படையில் கணக்கிட்டு வாடகை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கூறினார்.