வனச்சரக அலுவலகம் முற்றுகை பொய் வழக்கு போடுவதாக குற்றச்சாட்டு
ஆத்துார், தலைவாசல், மணிவிழுந்தான் ஊராட்சி பூமரத்துப்பட்டி மலை கிராமம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. அங்குள்ள காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள், விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.இதனால் விவசாய நிலத்தில் விலங்குகள் வராமல் இருக்க, கற்கள் வைக்கப்பட்டுள்ளன.சில நாட்களுக்கு முன், விவசாயி சக்தி மீது, கற்கள் வைத்தது தொடர்பாக, வனத்துறையினர் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர்.இதை கண்டித்து, மா.கம்யூ., சார்பில், தாலுகா செயலர் முருகேசன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் ஊர்வலமாக வந்து, ஆத்துார் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை, போலீசார் தடுத்ததால், அலுவலக கேட் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, 'காட்டெருமை நுழைவதை தடுக்க கற்கள் வைத்ததற்கு, 50,000 ரூபாயை வனத்துறையினர் கேட்டுள்ளனர். அதை தராததால், விவசாயி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை திரும்ப பெறவேண்டும். விலங்குகள், விவசாய நிலத்தில் வராமல் தடுக்க, வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை' என கூறி, வனத்துறையினரை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆத்துார் டவுன் போலீசார் பேச்சு நடத்தி, 'ஆத்துார் வன கோட்ட அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. நாளை(இன்று), சேலம் அலுவலகத்திற்கு வரும்படி, வனத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்' என்றனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.