| ADDED : பிப் 15, 2024 12:44 PM
சேலம்: தமிழகத்தில் கடந்த மாதம் வரை பல்வேறு மாவட்டங்களில் பகலில் மழையும், இரவில் பனி, அதிகாலையில் குளிர் காற்று வீசியது. இதனால் இரவு, பகலில் பஸ்களில் பயணிப்போர், 'ஏசி' பஸ்களை தவிர்த்தனர்.பிப்ரவரி தொடக்கத்தில் மழை தாக்கம் குறைந்து பனிப்பொழிவு, குளிர்காற்று இருந்தது. அதன் தாக்கமும் தற்போது குறைந்த நிலையில், பகலில் வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கி, இரவில் அனல் காற்று வீச ஆரம்பித்துள்ளது. இதனால் பகலில் வெயில் தாக்கத்தில் இருந்து தப்ப, 'ஏசி' பஸ்களை, பயணியர் பயன்படுத்தத்தொடங்கி உள்ளனர். அதே நிலை இரவில் தொடர்வதால், 'ஏசி' பஸ்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் பகலில் இயக்கப்படும், 590, இரவில் இயக்கப்படும், 210 பஸ்களில், ஒரு வாரமாக பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'மார்ச்சில், 'ஏசி' பஸ்களுக்கு வரவேற்பு இருக்கும். நடப்பாண்டு பருவ நிலை மாற்றத்தால் பிப்ரவரியிலேயே அந்த பஸ்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது' என்றனர்.