| ADDED : பிப் 17, 2024 07:13 AM
ஆத்துார் : ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு தீவன மானியம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் மாவட்டம் ஆத்துாரில் நேற்று, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: தமிழக அரசு, லிட்டருக்கு, 3 ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்த பின்பும், ஆவின் பால் கொள்முதல் அளவு உயரவில்லை. ஆனால், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில், 10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. அவை ஆவினுக்கு வராமல் தனியாருக்கு செல்கிறது. இதேநிலை நீடித்தால் ராஜஸ்தான், மஹாராஷ்டிராவிடம் பால் பொருட்களை, ஆவின் நிர்வாகம் கூடுதல் விலை கொடுத்து வாங்குவது தொடரும்.தற்போது வரை ஆவினில் பால் கொள்முதல் குறைந்ததால் பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது. தமிழக அரசு இடைக்கால நிவாரணமாக அறிவித்த ஊக்கத்தொகையை, நிரந்தரமாக வழங்க வேண்டும். அத்துடன் கர்நாடகாவை போன்று லிட்டருக்கு, 6 ரூபாய், ஆவின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் அ.தி.மு.க., ஆட்சியில், தீவன மானியம் கிலோவுக்கு, 2 ரூபாய் வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அந்த மானியம் நிறுத்தப்பட்டது. அதனால் தீவன மானியமாக, கிலோவுக்கு, 5 ரூபாய் வழங்க வேண்டும். மேலும் விபத்து உள்ளிட்டவற்றில் மரணம் ஏற்படும் உற்பத்தியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு தொகை, 2 லட்சம் ரூபாய் வரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தனியாருக்கு சென்ற உற்பத்தியாளர்கள், மீண்டும் ஆவினுக்கு வருவர். இவ்வாறு அவர் கூறினார்.