அச்சுறுத்திய சிறுத்தை உயிரிழந்த பரிதாபம்!
சேலம்: சேலத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, (செப்.,27) காலை வெள்ளக்கரட்டூர் வனப்பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் தின்னப்பட்டி ஊராட்சி வனப்பகுதியில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பு நுழைந்த சிறுத்தை 12 ஆடுகள், ஏழு கோழிகள், ஒரு நாயை பிடித்து சென்றது. சிறுத்தையை பிடிக்க கோரி, கிராம மக்கள் கொளத்தூர் வனத்துறை சோதனை சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.சிறுத்தையை பிடிக்க தின்னப்பட்டி ஊராட்சியில் வனப்பகுதியில் ஐந்து கூண்டுகள் மற்றும் 15 கேமராக்கள் பொருத்தப்பட்டது. சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தின்னப்பட்டி ஊராட்சியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில் இன்று(செப்.,27) காலை வெள்ளக்கரட்டூர் வனப்பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. சேலம் மாவட்ட வன அலுவலர் காசிப் ரவி, உதவி வன பாதுகாவலர் செல்வகுமார், மேட்டூர் வனச்சரகர் சிவானந்தன் உள்ளிட்டோர் சிறுத்தையை பார்வையிட்டனர். சிறுத்தையை பரிசோதனை செய்ய வனத்துறையினர் முடிவு செய்தனர். அச்சுறுத்தி வந்த சிறுத்தையால் பீதியில் இருந்த மக்கள், விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.