சேலம்: தை மாதப்பிறப்பையொட்டி, பெருமாள் கோவில்களில் திருப்பாவை சாற்றுமுறை மற்றும் 'மகர சங்காரந்தி' புறப்பாடு கருடசேவையில் எழுந்தருளி சேவை ஸாதித்தார்.சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவில், பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில், உத்தமசோழபுரம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும், நேற்று காலை திருப்பாவை சாற்றுமுறை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.காலை 8:00 மணிக்கு மகர சங்காரந்தியையொட்டி, தேவியர்களுடன் பெருமாள் சேர்த்தி சேவையில் திருவீதி புறப்பாடு செய்து பக்தர்களுக்கு சேவை ஸாதித்தார். சேலம் பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் கோவில் பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.இதே போல் மன்னார்பாளையம் பிரிவு லட்சுமி நரசிம்மர் கோவிலிலும், பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கருடசேவை ஸாதித்தார்.* ஆத்துார், கைலாசநாதர் கோவிலில் நேற்று சூரியன் பொங்கல் பண்டிகையொட்டி சூரிய பகவானுக்கு அபிேஷக வழிபாடு நடந்தது.பின் சூரிய பகவான், மூலவர் கைலாசநாதர் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். அதேபோல், தலைவாசல் அருகே, வீரகனுார் கங்காசவுந்தரேஸ்வரர் கோவிலில், சூரியன் பொங்கலையொட்டி சூரியன், மூலவருக்கு அபி ேஷகம் செய்யப்பட்டது.ஆத்துார், கோட்டை காயநிர்மலேஸ்வரர், தலைவாசல் காமநாதீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் நடந்த பூஜையின்போது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சூரிய நமஸ்கார பூஜை செய்து வழிபாடு செய்தனர்.* உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஓமலுார் செவ்வாய்சந்தை அருகே உள்ள காசிவிஸ்வநாதர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கடைவீதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில், ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோட்டை மாரியம்மன் கோவிலில் நடந்த பூஜையில் பெண்கள் பலர் அம்மனுக்கு பூஜை செய்து பொங்கல் படையலிட்டு வழிபட்டனர். காடையாம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில், காருவள்ளி சின்னதிருப்பதி, பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.* ஆத்துார் டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில், சமத்துவ பொங்கல் விழா, விளையாட்டு போட்டி நடந்தது. சேலம் மாவட்ட எஸ்.பி., அருண்கபிலன் துவக்கி வைத்தார். போலீசார் குடும்பத்தினர் வேட்டி, சேலை அணிந்து வந்து, ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோலம், உரியடி, கயிறு இழுத்தல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. டி.எஸ்.பி., நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.* ஆத்துார், கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகத்தில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஆத்துார் நிலைய அலுவலர் அசோகன், கெங்கவல்லி (பொ) செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.* ஆத்துார் அருகே, நரசிங்கபுரம் பழைய உடையம்பட்டி பகுதியில், பொங்கல் பண்டிகையொட்டி, ஊர் முக்கியஸ்தர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முக்கியஸ்தர்களாக பழனிவேல், சேட்டு, கரைக்காரர்களாக முருகேசன், காந்தி, சுப்ரமணி, ராஜா, பெரியண்ணன், செல்லமுத்து, பழனிவேல் உள்பட மொத்தம். 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.தொடர்ந்து, மகாசக்தி மாரியம்மன் கோவில் முன், பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.* தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, முதல் நாளில் சமையல் உப்பு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை வாங்கி, வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது தமிழர்களின் ஐதீகம். அதன்படி, தை முதல் நாளான நேற்று இடைப்பாடியில் உள்ள மளிகை கடைகளில் கூட்டம் அலைமோதியது. அதேபோல் சாலையோரத்திலும், உப்பு விற்கப்பட்டது. உப்பு வாங்க பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.