டி.ஏ.வி., கல்வி குழுமத்துடன் மால்கோ பள்ளி ஒப்பந்தம்
மேட்டூர்: துாத்துக்குடி ஸ்டெர்லைட் கூட்டமைப்பை சேர்ந்த, மேட்டூர் மால்கோ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை டி.ஏ.வி., கல்வி குழுமத்துடன், பள்ளி கல்வி பணிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. மால்கோ பள்ளி வளாகத்தில், இரு நிறுவன அதிகாரிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.அதில் துாத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன தலைமை நிர்வாகி அதிகாரி சுமதி பேசுகையில், ''டி.ஏ.வி., குழுமத்துடன் செய்துள்ள ஒப்பந்தம், எதிர்காலத்தில் இரு நிறுவனங்களும் இணைந்து சிறப்பான பள்ளியை உருவாக்கும். மேட்டூர், அதன் சுற்றுப்பகுதியை சேர்ந்த குழந்தைகளுக்கு வலுவான, அதிகாரமிக்க எதிர்காலத்தை உருவாக்கும்,'' என்றார்.டி.ஏ.வி., கல்வி குழும இயக்குனர் சாந்தி அசோகன், கல்வி குழும செயல்பாடுகள், சிறப்புகள் குறித்து பேசினார். இதில் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.