அ.தி.மு.க.,வில் பலர் ஐக்கியம்கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில், தி.மு.க.,வை சேர்ந்த பர்கூர் ஒன்றிய குழு தலைவி கவிதா, முன்னாள் ஒன்றிய செயலர் கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் சென்னப்பன், ஐயப்பன், சகுந்தலா, கு.லட்சுமி, அ.லட்சுமி, ராஜேஸ்வரி, கோவிந்தன், ஒப்பதவாடி ஊராட்சி வார்டு உறுப்பினர் நந்தகுமார், மல்லபாடி கிளை செயலர் பழனி, வெள்ளக்குட்டை ஊராட்சி தலைவர் சரஸ்வதி, ஊத்தங்கரை ஒன்றிய துணை செயலர் சிவக்குமார், தி.மு.க.வில் இருந்து விலகினர்.இவர்கள், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி ஏற்பாட்டில் அக்கட்சி பொதுச்செயலரான, சேலத்தில் உள்ள, இ.பி.எஸ்., இல்லத்தில், அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் அனைவரும், இ.பி.எஸ்., முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலர் பாலகிருஷ்ணரெட்டி, கிழக்கு மாவட்ட செயலர் அசோக்குமார், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பொங்கல் பரிசு வழங்கல்வனவாசி டவுன் பஞ்சாயத்து, 6வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் வெங்கடேசன். இவரது சார்பில் துாய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன், 35 பேருக்கு வேட்டி, சேலை வழங்கினார். தொடர்ந்து, 'உஜ்வாலா' திட்டத்தில், 50 குடும்பங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. பொதுச்செயலர் ஹரிராமன், ஒன்றிய தலைவர் தினேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஆம்புலன்ஸில் குவா... குவாஏற்காடு, சொரக்காப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதையன். இவரது மனைவி சத்யவாணி, 22. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மாதையன் தகவல்படி, அங்கு வந்த, '108' அவசரகால ஆம்புலன்ஸில், சத்யவாணி ஏற்றப்பட்டார். வழியில் அவருக்கு பிரசவ வலி அதிகரிக்க, டிரைவர் கண்ணன், ஆம்புலன் ைஸ ஓரங்கட்டினார். அவசரகால மருத்துவ நுட்புனர் சிகாமணி, பிரசவம் பார்த்தார். அதில் சத்யவாணிக்கு பெண் குழந்தை பிறந்தது. பின் தாய், சேயை, நாகலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.ஒரே பைக்கில் 3 பேர் பயணம்விபத்தால் தொழிலாளி பலிஒரே பைக்கில், 3 பேர் பயணித்த நிலையில், அதிவேகத்தால் விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி உயிரிழந்தார்.ஓமலுார், மேல்காமாண்டப்பட்டியை சேர்ந்தவர்கள் தினேஷ்குமார், 26, சஞ்சய், 20, பிரவீன்குமார், 26. கூலித்தொழிலாளிகளான இவர்கள், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, 'அப்பாச்சி' பைக்கில், மேச்சேரியில் இருந்து ஓமலுார் நோக்கி புறப்பட்டனர். பிரவீன்குமார் ஓட்டினார். யாரும் ஹெல்மெட் அணியவில்லை. அதிவேகமாக ஓட்டிச்சென்ற நிலையில், திமிரிக்கோட்டை அருகே, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயம் அடைந்த, 3 பேரையும், மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் பிரவீன்குமார் உயிரிழந்தார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.மக்கள் எதிர்ப்பால்மதுக்கடை மூடல்கொளத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே, சினிமா செட் சாலையோரம், டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடையை அகற்ற, 2012 ஏப்ரல், 2022 ஏப்ரல், டிசம்பரில் நடந்த டவுன் பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த கடையை இடமாற்ற, கடந்த செப்., 29ல், கலெக்டர், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டனர். எனினும் இடமாற்றப்படவில்லை.இதனால் ஏற்கனவே நிறைவேற்றிய தீர்மானத்தை, தி.மு.க.,வை சேர்ந்த, தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் கவுன்சிலர்கள், சேலம் டாஸ்மாக் அலுவலகத்தில் கொடுத்தனர். தொடர்ந்து, கொளத்துார் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள், பெண்கள், இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மதுக்கடை மூடப்பட்டது.முறையாக ஊதியம் வழங்கஒப்பந்த ஊழியர் வலியுறுத்தல்தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின், சேலம் மாவட்ட, 7 வது மாநாடு, சேலம் சி.ஐ.டி.யு., கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் பாஸ்கர், சங்க கொடியை ஏற்றினார். மாநில பொதுச்செயலர் சையத் இத்ரீஸ், மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.அதில், ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்குதல்; இ.பி.எப்., - இ.எஸ்.ஐ., சமூக பாதுகாப்பு சலுகைகளை உறுதிப்படுத்தல்; ஆட்குறைப்பு கூடாது; 'அவுட்சோர்சிங்' முறையை கைவிட்டு மீண்டும் தொழிலாளர் ஒப்பந்த முறையை அமல்படுத்தல்; ஊதிய நிலுவை, அடையாள அட்டையை உடனே வழங்குதல்; சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் மாவட்ட தலைவராக ராஜன், செயலராக செல்வம், பொருளாளராக குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.சங்கர தாஸ் சுவாமிகளின்101வது நினைவு குரு பூஜைசேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கம் சார்பில், நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின், 101ம் ஆண்டு நினைவு குருபூஜை விழா கல்லாங்குத்தில் நேற்று நடந்தது. தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். அதில் சங்கரதாஸ் சுவாமிகளின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நாதஸ்வர மேள வாத்தியத்துடன் நடந்த ஊர்வலத்தில், சங்கத்தினர் சிலர் அம்மன் வேடம் அணிந்து பங்கேற்றனர். அவர்கள், ஓரியண்டல் தியேட்டர் வரை ஊர்வலமாக வந்தனர். செயலர் சவுண்டப்பன், பொருளாளர் சக்திவேல், துணைத்தலைவர் முத்து சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.விஜயகாந்த் மறைவுஅமைதி ஊர்வலம்தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் மறைவையொட்டி, அக்கட்சியின் சேலம் மாநகர், மாவட்டம் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகம் அருகே, ஈ.வெ.ரா., சிலை முன் தொடங்கிய ஊர்வலம், முதல் அக்ரஹாரம், அருணாசல ஆசாரி தெரு வழியே, பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகம் அண்ணாதுரை சிலை முன் நிறைவடைந்தது. அங்கு விஜயகாந்த் படத்துக்கு, மாநகர் செயலர் ராதாகிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலர் மோகன்ராஜ், அருள்வாக்கு சித்தர் ஜெயராஜ், மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பா.ஜ., நிர்வாகி கோபிநாத் உள்பட பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.அ.பட்டணத்தில் அஞ்சலிவிஜயகாந்த் மறைந்து, 11ம் நாளையொட்டி, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலகம் எதிரே, தே.மு.தி.க., சார்பில், ஒன்றிய செயலர்கள் வெங்கடேசன், குமரிகாந்தன் தலைமையில் கட்சியினர், விஜயகாந்த் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாசிநாயக்கன்பட்டியில் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. ஒன்றிய அவைத்தலைவர்கள் மஞ்சுநாதன், ஜெய்கண்ணன், பொருளாளர் குருசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.