சேலத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி துவக்கம்
சேலம், தமிழகத்தில் ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, எண்ணும் எழுத்தும் எனும் திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. இதில், பிரத்யேக கையேடுகள் வழங்கப்பட்டு, குழந்தைகளுக்கு எண் மற்றும் எழுத்தை எளிதாக அறிமுகம் செய்வதோடு, அதன் பயன்பாடுகளையும் அதிகரிக்க செய்கிறது. நடப்பு கல்வியாண்டில், எண்ணும் எழுத்தும் கையேடுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவை குறித்து ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒன்றிய அளவில் மையம் அமைக்கப்பட்டு, இப்பயிற்சி நேற்று துவங்கியது. சேலம் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களில், 20 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும், 13 வரை ஐந்து கட்டங்களாக நடக்கும் பயிற்சியில், 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப்பொருள் குறித்த பயிற்சியை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் நடத்துகின்றனர்.