| ADDED : ஜூன் 15, 2024 07:48 AM
சேலம் : கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் இனி துறையின் முதன்மை அலுவலர் மட்டும் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:அரசின் சேவை, நலத்திட்ட உதவி, அடிப்படை தேவைகள் வழங்க குறைதீர் நாளில் மக்களிடம் பெறப்படும் மனுக்கள், உடனே கணினியில் பதிவேற்றி மனுதாரருக்கு ரசீது வழங்குவதோடு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விபரத்தை, அடுத்த வாரம் நடக்கும் குறைதீர் நாள் கூட்டத்துக்கு முன், கலெக்டராகிய நான் ஆய்வு செய்து தகுதியான மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது.இப்பணியை மேலும் செம்மைப்படுத்த திங்களில் நடக்கும் குறைதீர் கூட்டத்துக்கு இனி அனைத்து துறையின் முதன்மை அலுவலர் மட்டும் பங்கேற்க வேண்டும். அத்துடன் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம், தரைத் தளத்தில் உள்ள அதன் அலுவலகத்திலேயே நடத்தப்படும்.மாதந்தோறும் இறுதி வாரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தி அவர்களின் குறைகள் களையப்படுகின்றன. அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களை சென்றடைய, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், என் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் மாதம் ஒரு வட்டத்தில் ஒருநாள் முழுதும் தங்கி அப்பகுதியின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.