மகுடஞ்சாவடி: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரு தறி தொழிலாளிகள், உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இடங்கணசாலை நகராட்சி கே.கே.நகர் அருகே சின்ன ஏரி உள்ளது. அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, நேற்று காலை, நகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் மூலம் நிலத்தை சமன்படுத்தும் பணி நடந்தது. இதனால், அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மகுடஞ்சாவடி, சங்ககிரி, கொங்கணாபுரம், இடைப்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.நகராட்சி கமிஷனர் ஜேம்ஸ் கிங்ஸ்டன், சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா, பேச்சு நடத்தினர். அப்போது அங்கிருந்து வெளியேறிய தறித்தொழிலாளிகள் அறிவழகன், 34, கோபாலகிருஷ்ணன், 25, ஆகியோர், அருகில் இருந்த உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி, 'கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது' என கோஷம் எழுப்பினர்.அதிகாரிகள், மக்கள் உள்ளிட்ட அனைவரும், அவர்களை இறங்க அறிவுறுத்தினர். ஆனால், 'உள்ளூர் அதிகாரி முதல் முதல்வர் வரை மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இங்கு உடனே கலெக்டர் வரவேண்டும்' என கோஷம் எழுப்பியபடி, கோபுரத்திலேயே அமர்ந்தனர். பின் மக்கள் சார்பில் பேச்சு நடந்தது. அங்கு வந்த சங்ககிரி தீயணைப்பு துறையினர், அவர்களை கீழே இறக்க முயன்றனர். அப்போது தொழிலாளிகளே இறங்கி வந்தனர். இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம் பதற்றம் உருவானது.இதுகுறித்து அறிவழகன் கூறியதாவது:இங்குள்ள இரு பள்ளிகளில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஏரியை சுற்றி விவசாய நிலங்கள் உள்ளன. ஏற்கனவே ஏரியில் மின் மயானம், திடக்கழிவு மேலாண் திட்டத்தில் குப்பை கிடங்கு அமைத்துள்ளனர். கிடங்கு அருகே, பல இடங்களில், 2 அடி ஆழத்தில் குழி தோண்டி மருத்துவ கழிவை புதைத்துள்ளனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வந்தால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரம் பாதிக்கப்பட்டு கொசுத்தொல்லை அதிகமாகும். இத்திட்டத்தை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.