பசுமை மாநிலமாக மாற்ற மக்கள் முன்வர வேண்டும்
சேலம், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய தட்டிகளை பிடித்தபடி, திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம் வழியே சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர்.தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், ''பேரணி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மரக்கன்றுகள், துணிப்பைகள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை காக்க அனைவரும் ஒரு மரத்தையாவது நட்டு பராமரிக்க வேண்டும். மக்கள், காலி இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து, தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்ற முன்வர வேண்டும்,'' என்றார்.இதன் ஒரு பகுதியாக கிச்சிப்பாளையத்தில், மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜேந்திரன், மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா, மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மரக்கன்று நடல்சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ., சார்பில், கன்னங்குறிச்சி புது ஏரிக்கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுச்சூழல் பிரிவின் மாநில தலைவர் கோபிநாத், மாவட்ட தலைவர் வடிவேல், மாநகர் மாவட்ட தலைவர் சசிகுமார் உள்பட பலரும், மரக்கன்றுகளை நட்டனர்.விழிப்புணர்வு பேரணிஓமலுார் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் ஹெலன்குமார் தலைமையில், பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. பாத்திமா பள்ளியில், பேரணியை, ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவியர், பஸ் ஸ்டாண்ட், தாலுகா அலுவலகம் வழியே அரசு மருத்துவமனைக்கு சென்றனர். சான்றிதழ் வழங்கல்சங்ககிரி, தேவண்ணகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், ரோட்டரி சங்க கல்வி மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வர குப்தா, மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரம் வழங்கி பேசினார்.சங்ககிரி ரோட்டரி சங்க தலைவர் நந்தகுமார், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டார். பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மாணவ, மாணவியருக்கு ஓவியம், விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.