| ADDED : ஆக 20, 2024 03:16 AM
சேலம்: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு ஏராளமானோர் கோவில்களிலும், மடத்திலும், வீடுகளிலும் பூணுால் மாற்று வைபவம் நிகழ்ச்சி நடந்தது.ஆவணி மாதத்தில் பவுர்ணமியும், அவிட்டம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளையே ஆவணி அவிட்டமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி சேலம் கிச்சிப்பாளையம், குலாலர் மண்டபத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த ஏராளமானோர், வேதங்கள் முழங்க பூணுால் மாற்றிக்கொண்டனர். இதே போல முதல் அக்ரஹாரத்தில் உள்ள, ராகவேந்திரர் மடத்திலும், செவ்வாய்ப்பேட்டை ருக்மணி சமேத பாண்டுரெங்கநாதர் கோவிலிலும் நேற்று காலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கூடினர். பின்னர் புரோகிதர் வேத மந்திரங்கள் ஓத, தங்களது பழைய பூணுாலை கழற்றி விட்டு, புதிய பூணுாலை அணிந்து கொண்டனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.* ஆவணி அவிட்ட திருநாளான நேற்று, சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் மூலவர் கரபுரநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு 16 வகையான மங்கல பொருட்களால் அபி ேஷகம் செய்யப்பட்டது. கரபுரநாதருக்கு 'யக்நோ பவித்ரம்' என்ற புது பூணுால்கள் அணிவித்து, வெள்ளி நாகாபரணம் சார்த்தி சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் தர்ப்பணம் கொடுத்து, 'யக்நோ பவித்ரம்' அணிந்து கொண்டனர். அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.