வன உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக்கோரி போராட்டம்
ஆத்துார்: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், சேலம் மாவட்டம் ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் தர்மலிங்கம் தலைமை வகித்தார்.அதில் மாநில பொதுச்செயலர் சாமி நடராஜன் பேசியதாவது: கடந்த, 2006ல் அமல்படுத்திய வன உரிமை சட்டப்படி, கல்வராயன்மலையில் மலைவாழ் மக்களுக்கு பட்டா கேட்டு விண்ணப்பித்த பலருக்கு, நில அளவீடு செய்யாமல் பட்டா வழங்காமல் உள்ளனர். இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். 2008ல், கிராங்காட்டில் வசிக்கும், 45 பேருக்கு, அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 28 பேர் மீது வனத்துறை வழக்குப்பதிந்துள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, வனத்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை வழக்குப்பதிந்து, கைது செய்ய வேண்டும். நில அளவீடுக்கு, ஒருவருக்கு, 30,000 ரூபாய் பணம் பறிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆத்துார், கல்வராயன்மலை பகுதி மலைவாழ் மக்கள் பங்கேற்றனர்.