பைக் மீது கன்டெய்னர் மோதி பெயின்டர் பலி இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியல்
இடைப்பாடி: பைக் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் பெயின்டர் உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள், இழப்பீடு கேட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.கொங்கணாபுரம், ராயணம்பட்டி காட்டு வளவை சேர்ந்த, கோவிந்தன் மகன் சவுந்தரராஜன், 22. பெயின்டராக பணிபுரிந்தார். நேற்று, கே.டி.எம்., பைக்கில், ஹெல்மெட் போட்டு வேலைக்கு சென்றார். காலை, 10:00 மணிக்கு மூலப்பாதை அருகே சென்றபோது, ஒரு கன்டெய்னர் லாரியை, அதன் டிரைவர், அங்குள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்துக்கு திருப்பினார். அப்போது பைக் மீது மோதியதில், சவுந்தரராஜன் விழுந்தார். தொடர்ந்து லாரியின் பின்சக்கரம் ஏற, சம்பவ இடத்தில் சவுந்தரராஜன் உயிரிழந்தார்.இந்நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தான் வாலிபர் பலியானார் எனக்கூறி, இறந்தவரின் உறவினர்கள், அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். சங்ககிரி டி.எஸ்.பி., சிந்து உள்ளிட்ட போலீசார், பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றி, கொங்கணாபுரம் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கன்டெய்னர் லாரி டிரைவரான, இடைப்பாடி, வீரப்பம்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன், 41, என்பவரை கைது செய்தனர். ஆனால் இழப்பீடு குறித்து, அசோக் லேலண்ட் நிறுவனத்தினர், மாலை வரை அழைத்து பேசவில்லை. இதனால், பிரேத பரிசோதனை முடிந்து கொண்டு வந்த உடலை, சம்பவ இடத்திலேயே வைத்து, மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., சிந்து, மீண்டும் பேச்சு நடத்தி, ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனால் இரவு, 7:15 மணிக்கு, மறியலை கைவிட்டனர்.