மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த கோரிக்கை
சேலம் ;தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில், பதவி ஏற்பு, மாநில பொதுக்குழு மற்றும் பாராட்டு என, முப்பெரும் விழா, சேலத்தில் நேற்று நடந்தது. அதற்காக புது பஸ் ஸ்டாண்டில் இருந்து நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர்வலமாக புறப்பட்டு, விழா மண்டபத்தை அடைந்தனர். தொடர்ந்து, மாநில தலைவர் அமிர்தகுமார் தலைமையில் விழா நடந்தது. தேர்வு செய்யப்பட்ட மாநில, உயர்மட்ட குழு நிர்வாகிகள் பதவியேற்றுக்கொண்டனர்.அதில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குதல்; பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்குதல்; மருத்துவ காப்பீடு திட்டத்தில் நிலவும் பல்வேறு குளறுபடிகளால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதால் மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சேலம் மாவட்ட தலைவர் செல்வகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.முன்னதாக அமிர்தகுமார் கூறுகையில், ''வருவாய்த்துறையினரின் நியாய கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் பணி, சுமை என்றாலும், மக்கள் நலன் கருதி, அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர்,'' என்றார்.